மூன்றாம் பிறை
எந்த தெய்வத்தையும் அதன் உண்மை சொரூபத்தை காண்பது என்பது அரிது. அதுவும் இந்த கலியில் தெய்வ தரிசனம் நடக்கவே நடக்காத ஒன்று. ஆனால், இதில் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அது யாரெனில், அன்பும், கருணையும் உருவான சாட்சாத் மகாதேவர். கருணாமூர்த்தியான அந்த சிவனை மட்டும் நம் கண்களாலேயே தரிசிக்க இயலும்.
அது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த புராண கதையை பார்த்து விட்டு வருவோம்.
தட்சன் - பிரஜாபதிகளுள் ஒருவர். பிரஜாபதிகள் பிரம்மதேவனின் புத்திரர்கள். படைப்புத் தொழிலில் உதவி புரிவதற்காக பிரம்மனால் படைக்கப்பட்டவர்கள்.
சந்திரன் - பிரஜாபதிகளுள் ஒருவரான அத்திரி மகரிஷிக்கும், தேவி அனுசியாவிற்க்கும் பிறந்த புத்திரர்களுள் ஒருவர். குரு பிரகஸ்பதியிடம் சகல கலைகளையும் கற்றவர்.
தட்சனுக்கு பிறந்த 27 நட்சத்திரங்களான 27 பெண்களையும், தட்சன் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தார். 27 பெண்களில், ரோஹிணி மீது மட்டும் அதிகம் ஈடுபாடும், மற்ற மனைவிகளை கண்டு கொள்ளாமலும் இருக்கவே, தங்கள் தந்தையிடம் சென்று 26 பெண்களும் முறையிட்டனர். கோபமுற்ற தட்சனோ, தன் பெண்களை வேதனைப்படுத்திய குற்றத்திற்காக அவனுடைய கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து, பொலிவிழக்க சாபமிட்டார்.
சாபத்தின் விளைவு, சந்திரனின் கலைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக தேய்ந்தது. 14 நாட்களில் அனைத்தும் தேய்ந்து, மீதம் ஒரே ஒரு கலையோடு வாடி, சிவபெருமான் முன்னே போய் நின்றான். எல்லாம் இழந்து ஒரே ஒளி கீற்றாய் கீழே விழுந்த அந்த சந்திரனை, தாங்கி பிடித்து, தாயுள்ளத்தோடு மடி மேல் தாங்கி, அதற்கும் மேலாக தன் திருமுடி மேல் சூடி, அந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தார். தட்சனின் சாபத்தை முழுவதுமாக திரும்ப பெற முடியாது என்பதால், சாபத்தின் படி 15 நாட்கள் தேய்ந்தும், பின்பு ஈசனின் வரத்தின் படி மீண்டும் 15 நாட்கள் வளர்ந்தும் வாழும் நிலை ஏற்பட்டது.
அமாவாசை முடிந்து, மறுநாள் பிரதமை முடிந்து, மூன்றாம் நாள் சந்திரன் பிரகாசமாக வளர ஆரம்பிப்பார். சிவபெருமான் சூடிக் கொண்டிருப்பது இந்த பிறை சந்திரனை தான்.
ஈசனின் உடல் அங்கமான பிறை சந்திரனை தரிசிப்பது, பரம்பொருளான ஈசனையே தரிசிப்பதற்கு சமம். பிரம்மனும் காண முடியாது போன அந்த திருமுடியை தரிசிப்பது போலாகும்.
மாதம்தோறும் வரும் மூன்றாம் பிறை சந்திரனை தரிசித்து, ஈசனை நினைத்து வணங்குங்கள். முடிந்தால், ஒரு தாம்பூல தட்டில், விளக்கேற்றி, ஒரு மலரேனும் வைத்து, தண்ணீராவது நெய்வேத்தியமாக வைத்து, நிலவிற்கு ஆரத்தி காண்பித்து அந்த ஈசனை மகிழ்விய்யுங்கள். ஈசனின் அன்பிற்கும், அருளுக்கும் பாத்திரமாகுங்கள்.
எதுவும் இல்லாத பட்சத்திலும், கை கூப்பி ஈசனின் நாமத்தை சொல்லி வணங்குங்கள். நம் அன்பும், பக்தியுமே மிக உயர்ந்த நெய்வேத்யங்கள்.
அப்பர் பெருமான் அருளிய, ஆறாம் திருமுறையில் அமைந்த, இந்த பதிகத்தை பாராயணம் செய்து மகிழுங்கள்.
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
இப்பதிவில் , பிழைகள் ஏதேனும் இருப்பின் பெரியவர்கள் தயை கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன். பிழை திருத்தவும் வேண்டுகிறேன்.
நன்றிகளுடன் ,
ப்ரியா சம்பத்.
Comments
Post a Comment