கந்தர் அலங்காரம் (காப்பு) : மூத்தோன்

 வணக்கம் . 

        இந்த மண்ணில், எத்தனையோ ஞானிகள் தோன்றி இறைவனின் சிறப்புகளை பலவாறு பாடி மகிழ்ந்துள்ளார்கள். அவர்கள் இன்புற்றதோடு அல்லாது நமக்கு அவற்றை விட்டுச்சென்றதன் நோக்கம், அதை நாமும் படித்து  இறைவனின் பிரியத்திற்கு ஆட்படவேண்டும் என்பது தான். ஒரு குழந்தை தாயிடம் அன்போடு ஓடிவந்து அணைத்துக்கொள்ளும் போது அந்த தாய் எவ்வாறு அகமகிழ்வாளோ, அதே போல் தான் இறைவனை பற்றி பாடும் பொழுது, இறைவனும் தாயை போல உள்ளம் குளிர்கிறான். நாம் வேண்டியதை, வேண்டியவாறு பெறவும், நம்முடைய உள்ளம் தூய்மையடையவும், அதனால் நம் கர்மங்கள் தொலைந்து, இம்மையிலும் மறுமையிலும் இன்பங்கள் பெறவும் இப்படிப்பட்ட நூல்கள் பெரியோர்களால் இயற்றப்பட்டு இருக்கின்றன. அதில் முதல் நூலாக, கந்தப்பெருமானின் புகழ் பாடும் கந்தர் அலங்காரத்தை உங்களோடு பகிர்ந்து  கொள்வதில் எனக்கு  மிகுந்த மகிழ்ச்சி. 

கந்தர் அலங்காரம் - கந்தனின் அலங்காரங்களை (அழகு ) அதாவது இறைவனின் கல்யாண குண நலன்களை  பாடும் நூல். அப்படியென்றால் இறைவனுக்கே உரிய மங்களமான, எல்லையற்ற நற்பண்புகளாகும்.  இதை இயற்றியவர் அருணாரகிரிநாதர் அவர்கள்.  இது மொத்தம், காப்புச்செய்யுள்,  நூட்பயன் உட்பட 108 பாடல்கள் கொண்டது. கட்டளை கலித்துறை என்கிற பாடல் வகையையும், அலங்காரம் என்னும் சிற்றிலக்கிய வகையையும் சார்ந்தது. இப்பாடல்களை பாராயணம் செய்வதால் கர்மங்களும் மரணபயமும் நீங்கி, இறைவனின்  ப்ரீதியும் வேண்டும் வரமும் கிட்டும். தினம் ஒரு பாடலாக 108 பாடல்களையும் , முதல் பாடலான காப்புச் செய்யுளுடன்  தொடங்குவோம். 

 (அனைவரும் எளிதாக படிக்கும் வகையில், பாடல்கள்  பதம் பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் யாப்பு செய்யுள்களை, ஆசிரியர்கள் இயற்றிப்படி பாடும்போதுதான் அதன் இனிமை புலப்படும் என்பதே உண்மை. )


அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு

வடவருகில் சென்று கண்டுகொண்டேன் - வருவார் தலையில்

தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்

கடதட கும்பக் களிற்றுக்(கு) இளைய களிற்றினையே.

அருணை என்னும் திரு அண்ணாமலை . ஊழிக்காலத்திலும் அழியாத, நினைத்த மாத்திரம் முக்தி தரும் வலிமை உடையதும் , சிவந்த தீப்பிழம்பை போல ஜோதிமயமானது  இந்த  திருத்தலம். அதன்  அழகிய கோபுர வாசலுக்கு வடக்கு திசையில் வீற்றிருப்பவர் யாரோ?! என்று அருணகிரிநாதர்  வடதிசையை நோக்கிச் செல்கிறார். அங்கு அவர் கண்கள் கண்டது யாரை? 

அவரே , இனிப்பு நிறைந்த பாலையும், தேனையும், சர்க்கரையால் செய்யப்பட்ட பலகாரங்களையும்  விரும்பி உண்பவரும் பக்தர்கள் அன்போடு நெற்றியில் குட்டிக்கொள்வதை கண்டு மகிழ்ந்து ,  வேண்டுவதை நல்குபவருமான யானை முகத்தானின் இளையோனாகிய, யானை போன்ற வலிமையுடைய முருக பெருமான். 

இங்கேயிருந்து கந்தர் அலங்காரம் தொடங்குகிறது. ஒவ்வொரு பாடலையும் இனி தொடர்ந்து காணலாம். 

நன்றி ,

சண்முகப்ரியா K சம்பத்குமார் 

For English, please visit the link given below👇

Kandhar Alangaram Kappu


Comments

Popular posts from this blog

பாகீரதி - பாகம் 1 : நீர் என்னும் அமிழ்தம் (The Nectar)

மூன்றாம் பிறை (The Crescent)