கந்தர் அலங்காரம் (பாடல் 1) : வாத்சல்யம்


பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே.

செம்மை நிறமும் செழுமையான திருச்சடையின் மேல் கங்கை நதியையும்(ஆறு), சர்ப்பத்தையும்(பணி), கொன்றை மலரையும்(இதழி), வெண்மையான தும்பை மலரையும், சந்திரனின் கீற்றையும் சூடியிருக்கும் பெருமையுடைய சிவபெருமானின் குமாரனே! இந்த பிரபஞ்சம் என்பது கர்மங்களால் ஆன சேறு. இந்தச் சேற்றில் எப்படி நான் அகப்பட்டுக்கொண்டேன்? உன்னை நினைத்து, பணிந்து, பாடி பணிவதே தவம். அத்தவம் புரியவே  இவ்வுடலை தரித்துகொண்டு இம்மண்ணில் மனிதனாய் பிறந்திருக்கிறேன். ஆனாலும்,  அத்தவத்தை சிறிதேனும் செய்யாது, இந்த உலக இன்பம் என்னும் சேற்றில் சிக்கிக்கொண்டு தவித்த என்னை, அதிலிருந்து மீட்டெடுத்த, கருணையின் இருப்பிடமான கிருபாகரனே!  

என்று, தான் செய்த தீவினைகளை இறைவன் கருணையுடன் மன்னித்து, தன்னை ஆட்கொண்டதை எண்ணி பாடுகிறார். 

இந்தப் பாடலில், இறைவனின் கல்யாணகுணங்களில் ஒன்றான வாத்சல்யம் புகழப்பட்டிருக்கிறது. தன் அடியான் செய்த குற்றங்களை கருணையுடன் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பண்பே வாத்சல்யம் எனப்படுகிறது. இப்பாடலை சிந்தித்த நம்முடைய கர்மங்களையும், தன் கருணையினால் மன்னித்து ஆட்கொள்வான் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன். 
அடுத்த பதிவில் தொடர்வோம்.

சண்முகப்ரியா K சம்பத்குமார் 

For English, please visit the link given below👇

Comments

Popular posts from this blog

பாகீரதி - பாகம் 1 : நீர் என்னும் அமிழ்தம் (The Nectar)

மூன்றாம் பிறை (The Crescent)

கந்தர் அலங்காரம் (காப்பு) : மூத்தோன்