கந்தர் அலங்காரம் (பாடல் 2) : பாசக்கயிறு
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே
நம் கர்மங்களை எல்லாம் அழித்து, மீண்டும் பிறவாத நிலை எனும் மோட்சத்திற்கு அழைத்துச்செல்லும், கூரிய வேலினை ஏந்திய முருகப்பெருமானின் புகழ் பாடும் பாடல்களை அன்போடு பாடாது இருப்போர்களே! பொங்கிப்பெருகுமாறு புகையை எழுப்பும் பெருநெருப்பைப் போல கண்களை உடைய மரணதேவன், உங்கள் கழுத்தில் பாசக்கயிற்றினை வீசி, சுருக்கிட்டு இழுக்கும்போதா அவன் கவியை பாடலாம் என்று இருக்கிறீர்கள்?!
என்று நம்மை கேட்கும்படி அமைந்துள்ளது இந்த பாடல்.
காலம். நிற்காமல் சுழலும் சக்கரம். காலமும் மரணமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இவை இரண்டும் தண்டவாளத்தை போல. சேர்ந்தே பயணித்துக்கொண்டு இருக்கின்றன.
கையிலேயே கனியை வைத்துக்கொண்டு பசிக்கு அழுவது போல, காலம் உள்ளபோதே இறைவனை பாடி அவன் அருள் பெறாது விட்டால், மரணம் கண்முன்னே வந்த பின்பு அவனைப் பாடும் வாய்ப்பு இல்லாமலே போய்விடும். மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்ச சேற்றில் தத்தளிக்க நேரிடும்.
மரண தேவன் கடமையே உருவானவன்.
இறைவனோ கருணையே உருவானவன். காலம் உள்ளபோதே, அவன் புகழ் பாடி, அவன் கருணைக்கு பாத்திரமாவோம் என்று கூறி இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
அடுத்த பதிவில் தொடர்வோம்.
சண்முகப்ரியா K சம்பத்குமார்
For English, please visit the link given below👇
Comments
Post a Comment