மீனாட்சி திருக்கல்யாணம்


நம் இதிகாச புராணங்களில், அடியவர்களின் பக்திக்கு ஆட்பட்டு, அவர்களுக்கே இறைவன் பிறந்த வரலாறுகள்  நிறைய உண்டு. அதில் ஒன்றுதான், மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சியின் அவதாரம். 

கடம்பவனம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டதான தற்போதைய  மதுரையில், தன்னை மகளாக பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்த விச்சாவதி என்னும் கந்தர்வப்பெண்ணின் அன்புக்கு இறங்கி, அவள் தவம் புரிந்த இடமான  மதுரையம்பதியில் தோன்றும் பாண்டிய மன்னனின் மனைவியாகும் வரத்தையும், அவர்களுக்கே தான் மகளாக பிறப்பதாகவும் அம்பிகை வரம் அருளினாள். இந்திரனால் பூஜிக்கப்பட்டு, அந்த கடம்பவனத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனோடு, தன் பக்தர்களை இரட்சிக்கும் பொருட்டு, அம்பிகை இம்மண்ணில் அவதரித்து இருக்கிறாள். 

திருவாலவாய், கடம்பவனம் என்று அழைக்கப்பட்டதான மதுரையில், பாண்டிய வம்சத்தில், மலையத்துவசன் என்கிற மன்னன் தோன்றினான். அம்பிகையின் வரம் பெற்ற விச்சாவதி காஞ்சனமாலை என்கிற பெயரில் பிறந்து  மலையத்துவசனை மணந்தாள். பல வருடங்கள் பிள்ளை இல்லாத காரணத்தினால், புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததின் பலனால் , மூன்று வயது அழகிய பெண் குழந்தையாக கையில் கிளியை ஏந்தியபடி , மீன் போன்ற அழகிய கண்களுடனும் , மூன்று தனங்களுடனும்  யாகத்தில் இருந்து அம்மை தோன்றினாள். தடாதகை என்று தன் பெற்றோர்களால் பெயர் சூட்டப்பட்ட அன்னை மீன் போன்ற விழியுடையவள் ஆதலால் அங்கயற்கண்ணி மீனாட்சி என்று அன்போடு அழைக்கப்பட்டாள். .  தங்கள் குழந்தைக்கு, மூன்று தனங்கள் இருப்பதை கண்டு வருந்திய மன்னனின் கனவில் தோன்றிய அசரீரி, தனக்கு ஏற்ற மணாளனைக் காணும் பொழுது மூன்றாவது தனம் மறையும் என்று கூறி சென்றது. மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் மன்னனுக்கு பின் அரசாளும் யுவராணியாகிய தடாதகை,  சகல போர்கலைகளையும் கற்று தேர்ந்த பின், ஒரு நன்னாளில்  அரசியாக முடிசூட்டப்பட்டாள்.  தங்களுடைய இராஜ்ஜியத்தை பேரரசாக விரிவுபடுத்துவதற்காக மன்னர்கள் திக்விஜயம்  செல்வது வழக்கம். அரசியாக பொறுப்பேற்றபின்பு  திக்விஜயம் சென்ற தடாதகை, அனைத்து இராஜ்ஜியங்களையும் கைப்பற்றி, பின் இமயம் வரை சென்றாள். அம்மலையில் வீற்றிருக்கும்  மன்னனாகிய பெருமானை எதிர்க்க சென்றபோது, இறைவனும் தன்னுடைய பரிவாரங்களுடன் எதிரே புறப்பட்டு வந்தார். தன் மன்னனின் கண்களைக் கண்டதும், அவ்வளவு நாட்கள் ஏற்படாத நாணம்  அம்மையைத் தொற்றிக்கொண்டது. அந்த அழகிய முகத்தின் மீது காதல் பெருக்கெடுத்தது. அடுத்த கணமே அவளின் மூன்றாவது தனம் மறைந்துவிட்டது. தன் மணாளன் இவரே என்று அறிந்து கொண்ட தடாதகை, தங்கள் நாட்டிற்கு வந்து, தன் தந்தையிடம் பெண் கேட்டு தன்னை மணந்துகொள்ளுமாறு இறைவனிடம் கூறிவிட்டு, தன் இல்லம் வந்து சேர்ந்தாள். மன்னனின் மகளை மணம் செய்து கொள்ளப்போகும் மணமகனாகி விட்ட பெருமான், அழகிய சுந்தரனாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் பரிவாரங்களோடு மதுரையம்பதி வந்து சேர்ந்தார். தேவாதி தேவர்கள் சூழ, அத்திருமணம் கோலாகலமாக நடந்தது. சுந்தரபாண்டியன் என்கிற திருநாமத்தோடு பல ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்த பின்பு, தங்கள் திருக்குமாரன் முருகப்பெருமானின் அம்சமாக பிறந்த  உக்கிரகுமார பாண்டியனுக்கு முடிசூட்டிவிட்டு பின் கயிலையை அடைந்தார்கள் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. தான் மன்னனாக அரசாண்ட இந்தப் பாண்டிய நாட்டில் தான்,  இறைவன் தன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்பது இந்நாட்டிற்கே உரித்தான பேறு. தாமே தலைவனாக இருந்து இம்மதுரையம்பதியிலே தமிழ்ச்சங்கத்தை நிறுவினார் என்பது தமிழுக்குப் பேறு. 

அம்மையப்பர் நித்தியமாக மீனாட்சி சுந்தரேஸ்வரராக கோவில் கொண்டு அருள்பாலிக்கும்  இத்திருக்கோவிலானது, பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனால் கட்டப்பட்டது.

கடம்பவனத்தில் சுயம்புவாக தோன்றியிருக்கும் சிவலிங்கத்தை, இரவு யாமங்களில் விண்ணுலகில் உள்ளோர் வழிபடுவதைக் கண்ட தனஞ்செயன் என்னும் வணிகன், குலசேகர மன்னனிடம் கூற, அன்றிரவே சித்தர் ரூபம் கொண்டு  மன்னன் கனவில் தோன்றிய இறைவன், தான் இருக்கும் கடம்பவனத்தை நாடாக்க கூறி மறைந்தார். இறைவனின் ஆணையை ஏற்று, பெருமானுக்கு மாபெரும் ஆலயமும், அதை மாடமாளிகைகள் சூழ, நகரமாக அமைத்தான் குலசேகர மன்னன். கடம்பவனமாக இருந்து நகரமாக மாறிய இத்தலத்தின் தலவிருட்சமாக, கடம்ப மரம் விளங்குகிறது. 

மீனாட்சி திருக்கல்யாணம், நினைத்த மாத்திரம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும் மங்கல நிகழ்வு.

இன்றளவும் கோலாகலமாக மதுரையம்பதியில் நடந்து கொண்டிருக்கும் இந்த திருமணம் ஒரே ஒரு முறை மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, ஆரல்வாய்மொழி என்கிற தலத்தில் உள்ள பரகோடி கண்டான் சாஸ்தா ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றதை சொல்வதாக எழுதப்பட்ட, எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் குமரித்துறைவி என்கிற குறுநாவலின் சுருக்கத்தை, மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் திருமணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த நன்னேரத்தில், உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சி.  

பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர், தென்னாட்டை நோக்கி படையெடுத்த காலம். மதுரையின் மீது படையெடுக்க வருகிறார்கள் என்று தெரிந்து கொண்ட மீனாட்சியம்மன் கோவில் ஆச்சார்யர்கள், மதுரையை அவர்கள் அடைந்தால் மீனாட்சியம்மன் கோயில் தான் இலக்காக இருக்கும் என்று அன்னை மீனாட்சியையும், சுந்தரேஸ்வரருக்குப் பதிலாக வைகை நதியில் இருந்து ஒரு கல்லை பெருமானாக பாவித்து வணங்கிக்கொண்டு, இருவரையும்  ஒரு பல்லக்கில் வைத்துக்கொண்டு மதுரையை விட்டு கிளம்பி போனார்கள்.  நகருக்குள் செல்லாது, எங்கு போவதென்றும் அறியாது,  நகரைச்  சுற்றியிருக்கும் காட்டுப்பகுதியின் வழி சென்றார்கள். அவர்கள் போகிற வழியிலே, அழகிய குறமகள் அவர்களைக் குறுக்கிட்டாள். அன்னையின் குங்குமவாசனையை தான் அறிந்துகொண்டதாக கூறிய அவள், தெற்குநோக்கிச் செல்லுமாறு வழிகாட்டினாள். ஆடிமாதம் பிறந்து, கொன்றைப்பூக்கள் பூத்திருப்பதை எங்கு காண்கின்றீர்களோ, அங்குள்ள நீரோடை அருகே அன்னையை ஒளித்துவைக்குமாறு கூறிச் சென்றாள். போகின்ற வழியிலே கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று அவர்களை குறுக்கிட்டது. ஆனால், அன்னையின் தரிசனம் பெற்ற அவர்கள், அதன் பின்பு அந்த ஆச்சார்யர்களுக்கு காவலாகச் சென்றார்கள். கடுமையான அந்தக் காட்டுப்பாதையின் வழியே, பலமாதங்கள் பயணம் செய்த பின்பு ஆரல்வாய் மொழியை  அடைந்தார்கள். அப்பொழுது ஆரல்வாய்மொழி, வேணாடு என்று அழைக்கப்பட்ட திருவிதாங்கூர் அரசின் எல்லையாகவும், அதன் கட்டுப்பாட்டிலும் இருந்தது. குளிர்காற்று வீசி, மழைச்சாரல் அடிக்க ஆரம்பித்தபோது ஆடிமாதம் பிறந்தது என்று சிவாச்சாரியார்கள் அறிந்து கொண்டார்கள் . அங்கு கொன்றைமலர்கள் அரும்பி நின்ற நீரோடைக்கரையில் இருந்த பரகோடி கண்டன் சாஸ்தா  ஆலயத்தைக் கண்டார்கள். இதுதான் அம்மை இருக்கப்போகின்ற இடம் என்று நிச்சயித்து மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் அங்கு பிரதிஷ்டை செய்துவிட்டு, அந்த நாட்டை அப்பொழுது ஆண்டுகொண்டிருந்த மன்னனான ரவிவர்ம குலசேகரனிடம் நடந்தவற்றைக்கூறினார்கள். பல ஆண்டுகளாக மழை பெய்யாது, வறுமையின் பிடியில் சிக்கியிருந்த அந்த நாட்டின் மன்னன், அம்மையின் காலடியில் வந்து வீழ்ந்தான். மழை பொய்த்ததால் மக்களின் சாபத்திற்கு ஆளான மன்னனின் நிலைக்கு மனமிரங்கி அன்னை, அந்நாளே மழை பெய்வித்தாள். அன்றிலிருந்து ஆரல்வாய்மொழியின் மகளாக அம்மண்ணின் வளம் பெருக்கினாள். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே இருந்தாள் அன்னை. ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு, சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து  மதுரையின் ஆட்சியைக் கைப்பற்றினார்,  விஜயநகரப் பேரரசர் முதலாம் புக்கரின் மகன், குமார கம்பண்ணா. அவரின் மனைவி கங்காதேவியின்  கனவில் தோன்றிய அம்மை, தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு வர ஆசைகொள்வதாக கூறினாள்.  

அப்பொழுது, வேணாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் மன்னன் ஆதித்ய வரகுண சர்வாங்கநாதன். விஜயநகர பேரரசின் சார்பில், வீரபாகு எனும் தூதுவர்  அம்மையை திரும்ப நாட்டிற்கு அனுப்ப வேண்டி, வேணாட்டின் உயர் அரசு அதிகாரியாய் இருந்த கட்டளைக்காரர், வீரமார்த்தாண்டன் உடையான் செண்பகராமனை சந்திக்கிறார். அவர் மூலமாக, மன்னனிடம் இச்செய்தி செல்கிறது.  ஆனால், ஆசையாய், அரவணைத்து  மகளைப் போல இந்த ஐம்பது ஆண்டுகளாகப்  பார்த்துகொண்ட அன்னையை பிரிய சற்றும் விருப்பமில்லாத அவர்கள், "அவளே எங்களின் மங்கலம். அவளை அனுப்பி விட்டு நாங்கள் என்ன செய்வது" என்று வேதனையடைகிறார்கள். அன்னை சென்ற பின்பு மதுரையே மங்களமின்றிப் போனதை வீரபாகு கூறி வருந்துகிறார். கூட்டிசெல்ல தவிக்கும் அவர்களுக்கும், அனுப்ப மனமின்றி தவிக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள இந்தப் பிரச்சனைக்கு, இருவருக்கும் பொதுவான, ஒரு மரியாதைக்குரிய நபர்  பதில் கூறுவது தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து,  திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தங்கியிருந்த,  இருஞ்சாலக்குடா பரமேஸ்வரன் நம்பூதிரி என்பவரை மூவரும் சந்திக்கிறார்கள். பெரியவர், "ஒரு பெண்ணை, அவளது தந்தை திருமணம் முடித்து அனுப்பும்பொழுது, அவள் பிறந்த இடத்திற்கும் மங்கலம் புகுந்த இடத்திற்கும் மங்கலம்.  எனவே, குமரியின் மகளாகிய மீனாட்சியை, சுந்தரேஸ்வரருக்கே மணம் முடித்து, தம்பதிகளாக  மதுரைக்கு அனுப்பி வைத்தால், மதுரைக்கும் மங்கலம், ஆரல்வாய்மொழிக்கும்  மங்கலம்" என்று கூறினார். அதன்பின்பு பிரிய மனமில்லை என்றாலும், ஒருவாறு மனதைக் தேத்திக்கொண்டு சம்மதித்தார் செண்பகராமன். இறுதி வரை திருமணம் எப்படியாவது நின்று அன்னை இங்கேயே இருந்திட வேண்டும் என்று செண்பகராமன் வேண்டிக்கொண்டே இருந்ததாகவும், அன்னை சிறு குழந்தையாய் வந்து தான் மதுரை சென்றாலும்,  தங்களைப் பிரியப்போவதில்லை என்றும், தான் குமரித்துறைவியாக என்றும் அவர்களோடு இருப்பதை உணர்த்தி அவரின் மனக்கலக்கத்தை நீக்கினாள் என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மன்னன் ஆதித்ய வரகுணர், மிகவும் கோலாகலமாக ஆனந்தமாய் மீனாட்சியின்  திருமணத்தை நிகழ்த்தினார். வழிநெடுக திருவிழாக்கோலம் பூண, அம்மையப்பரை அனுப்பி வைத்தார். சகல ஆரவாரங்களோடு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையம்பதியை அடைந்தார்கள். மன்னர் குமார கம்பண்ணாவின் ஆட்சியில், மீண்டும் மீனாட்சியம்மன் ஆலய வழிபாடு தொடங்கியது. ஒரு சடங்காக நடந்துகொண்டிருந்த திருக்கல்யாணம், குமார கம்பண்ணாவின் ஆட்சியில் தான், மதுரையின் பெருமையை மீட்டெடுத்த மங்களத்திருவிழாவாக மாறியது.  

அதன்பின்பு வந்த மதுரை நாயக்க மன்னர்கள், குறிப்பாக திருமலை நாயக்கர், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்திலும், மதுரையின் திருவிழா கலாச்சாரத்திலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். 

மணப்பெண் மீனாட்சியை கள்ளழகர் தாரை வார்த்துக் கொடுக்கும் (கன்னிகாதானம்) நிகழ்வை, பிரம்மாண்டமான சடங்காக மாற்றினார். முன்பு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மாசி மாதத்திலும், அழகர் ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்திலும் தனித்தனி சைவ வைணவ விழாக்களாக நடந்தன. திருமலை நாயக்கர் இவை இரண்டையும் ஒன்றிணைத்து சித்திரைத் திருவிழாவாக மாற்றினார். அதனால் "தங்கையின் திருமணத்தை நடத்த அண்ணன் வருகிறார்" என்று சைவ-வைணவ ஒற்றுமை பலப்பட்டது. அறுவடை முடிந்த சித்திரை மாதத்தில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், திருவிழாவை அந்த மாதத்திற்கு மாற்றியதன் மூலம் மதுரையின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்பட வழிவகை செய்தார். சகல வசதிகளோடு, ஆனந்தமாய் மீனாட்சியம்மையின் திருக்கல்யாணத்தை நாம் காண வழிசெய்த நாயக்க மன்னர்களுக்கு,  இந்த நேரத்தில் நாம் நிச்சயம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். 

ஒவ்வொரு வருடமும் இவ்வைபவத்தை கண்டு மகிழ, கோடான கோடி  மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தேடிவரும் தன் பிள்ளைகளை அரவணைத்துக்கொண்டு, அவர்கள் வேண்டும் வரத்தை  வாரிவழங்கிக்கொண்டு இருக்கும் அம்மையப்பராகிய, நம்முடைய  திருமணத்தம்பதிகளை வாழ்த்தி, வணங்கி மகிழ்வோடு இப்பதிவை  நிறைவு செய்கிறேன். 

நன்றி.

சண்முகப்ரியா K சம்பத்குமார் 

For English, please visit the link given below👇

Meenakshi Thirukalyanam

Comments

Popular posts from this blog

பாகீரதி - பாகம் 1 : நீர் என்னும் அமிழ்தம் (The Nectar)

மூன்றாம் பிறை (The Crescent)

கந்தர் அலங்காரம் (காப்பு) : மூத்தோன்