கந்தர் அலங்காரம் (பாடல் 10) : வரையறையில்லா வல்லபம்




சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபனே.

கொல்லிப்பண் இசைக்கும் குறிஞ்சி நில மகளான, கோவைப்பழம் போன்ற சிவந்த இதழ்களை உடைய, வல்லிக்கொடிபோன்ற வள்ளியை அணைக்கும் மலை போன்ற தோள்களை உடைய, வலிமைமிக்க வேல்கொண்ட பெருமானே! நீரே, சொல்வதற்கு எதுவுமில்லை என்கிற மௌனமாகிய நிலையை நான் அடைய வழிகாட்டிய பெருமைக்குரியவர்!

வல்லிக்கொடி என்பது சங்க இலக்கியத்தில், மலைப்பகுதிகளில் வளரும் ஒருவகைத் தினைக் கொடி. மெல்லிய அந்தக் கொடியினைப் போல மென்மையான உடலுடையவள் வள்ளி. அவளின் இதழ்களோ கோவைப்பழம் போன்ற அழகிய சிவந்த இதழ்கள். அவள் இசைக்கும் பண்ணோ கொல்லி என்னும் பண். தலைவனும் தலைவியும் ஊடல் கொள்ளும்போதும், மகிழ்ச்சியில் களிக்கும் போதும் மருதயாழ் கொண்டு இசைக்கப்படும் பண். அவளை வலிமையான மலை போன்ற தோள்களை கொண்ட பெருமான் அன்போடு அணைத்துக்கொள்கிறார். 

ஜீவாத்மாவும் அவள் போலத்தான். மென்மையான அன்பு நிறைந்த மனத்தையும், அன்பான வார்த்தைகளையும், மகிழ்வோடு இறைவனைப் பாடும் பக்தியையையும் கொண்ட ஜீவனை,  இறைவன்  கருணை என்னும் தன் பெரும் வலிய புஜங்களினால் அணைத்துக்கொள்கிறார். 

உலகப் பற்றுக்கள் அனைத்தையும் விட்டு, சொற்கள் எண்ணங்கள் என்று, எதுவும் மனதில் உதிக்காத ஒரு தெளிவான மௌனநிலை. அதுவே ஞானத்தின் ஆரம்ப எல்லை. அதன் எல்லைக்குள் நம்மை புகுத்தி விட வல்லமை பெற்றவர், அதே சொற்களால் அடக்கி விட இயலாத பெரும் புகழையுடைய பெருமைக்கு உரியவரான  முருகப்பெருமான். 
இறைவனின் புஜங்களில் அணைக்கப்பெற்ற ஜீவன், அந்த ஞான எல்லைக்குள் நுழைகிறது. பெருமையுடைய இறைவனையே இறுதியாக அடைகிறது. 

அடுத்த பதிவில் சந்திப்போம். 

சண்முகப்ரியா K சம்பத்குமார் 

For English, please visit the link given below👇

Comments

Popular posts from this blog

பாகீரதி - பாகம் 1 : நீர் என்னும் அமிழ்தம் (The Nectar)

மூன்றாம் பிறை (The Crescent)

கந்தர் அலங்காரம் (காப்பு) : மூத்தோன்