கந்தர் அலங்காரம் (பாடல் 11) : மாமயில்
குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியில் எண்
திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டது.
ஜெயத்திற்கு உரியவரான, வேல் ஏந்திய முருகப்பெருமான் அசுரர்களை வதம் செய்ய கிளம்புகிறார். கடிவாளத்தை தளரவிடாது, குதிரையின் வேகத்தையும் விஞ்சும்படி பறக்கும், தன் மயில்வாகனத்தின் மீதேறி வருகிறார். அம்மயில் தோகையின் கொத்துக்கள் அசைவதினால், காற்றில் ஏற்படும் அடர்த்தியினால், அம்மேரு மலையே அசைந்துவிட்டது. அது நிலத்தில் தன் கால் ஊன்றி நின்ற கணம், எட்டுத்திசைகளிலும் உள்ள மலைகள் தூள் தூளாயின. அத்துகள்கள் சமுத்திரத்தின் மீது எழும்பி, அச்சமுத்திரமே மேடாகிவிட்டது. வேலவர்தம் வாகனத்தின் வலிமை கண்டே, அசுரர்களின் குடல்கள் பயத்தில் கலங்கிவிட்டன.
இறைவன் என்றும் வெற்றியை மட்டுமே உடையவர். ஆதலால் அவர் வெற்றிவேலவர். இறைவனை மட்டுமன்றி, இறைவன் கொண்ட மயில்வாகனத்தின் வல்லபத்தை அருணகிரிநாதர் இப்பாடலில் போற்றியிருக்கிறார். அடியவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் குமரனை, அவன் அடியானிடம் அவ்வளவு சீக்கிரத்தில் கொண்டு போய் சேர்ப்பது அம் மாமயிலல்லவா!?
நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலத்தில் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன அருணகிரிநாதர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள். வாழ்வின் மீது வெறுப்புற்று அருணகிரிநாதர் தற்கொலை செய்து கொள்வதற்காக மேலே ஏறி குதித்தது திருவண்ணாமலை திருக்கோவிலின் கிளி கோபுரத்தின் மீது தான். கீழே விழுந்த அவரை தாங்கி பிடித்து, தனி என்னும் தத்துவத்தை முருகப்பெருமான் உபதேசித்ததும் திருவண்ணாமலை திருத்தலத்தில் தான். திருப்புகழ் பாட அருணகிரியாருக்கு, "முத்தை தரு" என்று முதல் அடியை எம்பெருமான் எடுத்துக் கொடுத்ததும் இதே திருத்தலம் தான். அதோடு மட்டுமல்லாது, முருகப்பெருமானை நேரில் வரவைத்து காட்ட சொல்லி தன்னை வாதுக்கு அழைத்த சம்மந்தாண்டானை வெற்றிகொள்ளவும், இறைவன் தரிசனம் கிடைக்க தன்னை வேண்டிக்கொண்ட பிரபுட மன்னனின் வேண்டுதலை அருணகிரியார் நிறைவேற்றவும், கோயில் தூணை பிளந்து கொண்டு, மயில் மீது முருகப்பெருமான் காட்சியளித்ததும் இப்புனிதத் திருத்தலமே.
அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில், திருவண்ணாமலையை ஆண்டு வந்தவர் பிரபுடதேவன் என்னும் மன்னன். அருணகிரிநாதர் மீது நன்மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார் மன்னன். அதேசமயம் மன்னனுக்கு சற்று நெருக்கமானவனும், காளிதேவியின் உபாசகனுமான சம்மந்தாண்டான் அருணகிரிநாதர் மீது கோபமும், பொறாமையும் கொண்டான். ஒருசமயம் , முருகப்பெருமானின் தரிசனம் தானும் பெற ஆசை கொண்டு, முருகப்பெருமானை தனக்கு காட்டியருளும்படி, அருணகிரியாரிடம் மன்னர் வேண்டிக்கொண்டான். இதைக் கேட்ட சம்மந்தாண்டானோ, அது அருணகிரியால் முடியாதெனக் கூற, இருவரும் தத்தம் அவர்தம் இஷ்ட தெய்வங்களை நேரில் வரவழைக்க வேண்டும் என்கிற போட்டி ஏற்பாடானது. திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கரையில் சபை கூடியது. சம்பந்தாண்டானால் காளிதேவியை வரவழைக்க முடியவில்லை. ஆனால் தன் உபாசகனின் கோரிக்கையை ஏற்று, அன்னை தன் பிள்ளையை வரவிடாது பிடித்து வைத்துக்கொண்டாள். சம்மந்தாண்டானுக்கு பின், அருணகிரிநாதர் முருகனை வரவழைக்க பாடிய பொழுது வெகுநேரமாகியும் முருகப்பெருமான் வரவில்லை. தன் ஞான த்ருஷ்டியினை கொண்டு நடப்பதை அறிந்த அருணகிரிநாதர், அதல சேடனார் ஆட என்கிற திருப்புகழைப் பாடினார். அப்பாடலில் மெய் மறந்த அன்னையின் கைகள் தளர்ந்தன. அன்னையின் மடியில் இருந்து விடுபட்டு குழந்தை ஓடிவந்ததும், மயிலும் ஆடி நீ வரவேணும் என்று பாடியபொழுது, மயில் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து முருகனை ஏற்றிக்கொண்டு நொடிப்பொழுதில் கோவில் தூணை பிளந்து, முருகப்பெருமான் தரிசனம் அனைவரும் காணும்படி செய்தது.
இத்தகு பெருமை கொண்ட அம் மாமயிலை வாழ்த்தி வணங்கி, இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
(திருவண்ணாமலை திருத்தலத்தில், சிவகங்கை தீர்த்தத்தின் கரையில் அமைந்துள்ள, கம்பத்திளையனார் சன்னதியில் அத்தூணை நீங்கள் தரிசிக்கலாம்.)
சண்முகப்ரியா K சம்பத்குமார்

Comments
Post a Comment