கந்தர் அலங்காரம் (பாடல் 12) : வெற்றிச்சேவல்
படைபட்ட வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக்கொள்ளச் சலதி கிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுபடலம்
இடைப்பட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே.
"மாபெரும் சேனைப்படையினை உடைய மகாசேனனாகிய வேலாயுதப்பெருமான். அவரது கைகளில் ஏந்தியிருப்பதோ வேலொடு வெற்றிச்சின்னமாகிய சேவற்கொடி. அச்சேவலானது, தன் சிறகுகளை அடித்துக்கொள்ளும்போது சமுத்திரமானது கிழிந்தது. இப்பிரபஞ்சத்தை மூடியுள்ள ஓடானது உடைந்தது. நட்சத்திரக்கூட்டங்கள் தடுமாறின. மேருவும், இன்னபிற மலைகள் அனைத்தும் இடிந்தன."
என்று பெருமானின் சேவற்கொடியின் வல்லமையை இப்பாடலில் உரைக்கின்றார்.
முருகப்பெருமான் ஞானம், சக்தி, பலம், வீர்யம், தேஜஸ், ஐஸ்வர்யம் என்னும் ஆறு பரிபூர்ண நற்பண்புகளின் சொரூபமாகும். இறைவன் உள்ளமோ தூய்மையும், அமைதியும், ஈகையும், பணிவும் சாந்தமும், அன்பும், கருணையும், பற்றுக்கள் அனைத்தையும் அற்ற தெளிவும் கொண்ட நிர்மல பரிபூரணமாகும்.
முருகப்பெருமான் உண்மையிலேயே அழித்தது யாரை? இரத்தமும் சதையுமான உடல்களை கொண்டவர்களையா? அல்ல. இறைவன் அழித்தது அவர்கள் மனத்தில் ஊறிப்போயிருந்த காம, க்ரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்னும் பகைவர்களை.
காமம் என்பது ஆசை. ஆசை கொள்தல் மனித இயல்பு. ஆனால் அது பிறர் துன்பத்திற்கோ, பிறருக்கு இடையூறு விளைவிக்கும்படியோ, அறத்தினை மீறிய ஆசையாக இருத்தல் கூடாது. மனத்தூய்மையே காமத்தை கொல்லும் ஆயுதம்.
க்ரோதம் என்பது தீராத கோபம்; வெறுப்பு. கோபம் கொண்ட உள்ளம் அமைதியை எழ விடாது தடுத்துவிடும்.
லோபம் என்பது ஆசையினும் மீறிய பேராசை. ஈகையினாலேயே லோபத்தை அழிக்க இயலும்.
மோகமோ தீவிரமான பற்று. எது தர்மம் என்று உள்ளத்தை உணரவிடாது. சிலசமயங்களில் அது ஆக்ரோஷம் நிறைந்ததாகவும் மாறிவிட வாய்ப்புள்ளது. பற்றுக்களற்ற தெளிந்த உள்ளம் மோகத்திற்கு எதிரி.
மதம் என்பது, தான் என்கிற வெறித்தனமான அகந்தை. 'இதுவே தர்மம்' என்று தெரிந்தாலும் கூட அதை செய்யவிடாது செய்து விடும் கொடிய நோய் இது. பணிவே அதை நீக்கும் சக்திகொண்ட மருந்து.
மாத்சர்யம் என்பது பொறாமை. மேற்சொன்ன ஐந்து பகைவர்களுக்கு இதுவே தாய் எனலாம். அன்பும் பிறருக்காக மகிழும் பெருந்தன்மையும் இதன் எதிர் துருவம்.
பிறர்வசம் உள்ள நன்மைகளைக் கண்டு ஏற்படும் பொறாமை என்னும் உணர்வு ஆசையினை தூண்டுகிறது. ஆசை, பேராசையாகவும், பேராசை நிறைவேறாத பட்சத்தில், பற்றென்னும் வெறியாகவும், அவ்வெறி கோவமாகவும் உருவெடுத்து, அதுவே அகங்காரத்திற்கு பாதை அமைக்கிறது. இந்த ஆறு பகைவர்களும் உள்ளத்தில் பிறந்து வளர்ந்து விட்டால், இறைவன் வசம் ஆட்படுவது எவ்விதம் நடக்கும்?
இறுதிநாள் போரில் தன் சேனை, சகோதரர்கள், ஆயுதங்கள் என அனைத்தும் இழந்த சூரன், இந்த ஆறு பகைமைகளினை இழக்காது, நெடுமரமாய் நின்று விட்டான். சகல வல்லமையும் படைத்த பெருமான், தன் வேல் கொண்டு மரத்தை இரண்டாய் பிளந்தார். அக்கணமே சூரனின் அவ்வாறு பகைமைகளும் அழிந்தன. இறைவனின் கருணையே அவனை மயிலெனவும் சேவலெனவும் உருமாற்றியது. ஏன் அது தடைபட்ட சேவல்? இறைவனை அடையவிடாது தடுத்து நின்ற பகைமை அழிந்து மீண்டு வந்த சேவல்.
சேவல், இருளினை அழிக்கும் ஒளியின் சின்னம். வேலனது வெற்றியின் சின்னம். மலை இடிந்து, கடல் கிழிந்து, அண்டம் உடைந்து நொறுங்கவைக்கும் அளவுக்கு மாபெரும் வல்லமை கொண்ட அச்சேவற்கொடியினை, நம் மனதை அண்டி சிறைபிடித்திருக்கும் பகைவர்களை அழித்து நம்மை ஆட்கொள்ளவே, இறைவன் தன் கைகளில் ஏந்தியிருக்கிறார்.
அவ்வெற்றிச் சேவலைப் போற்றி இப்பதிவினை நிறைவு செய்கிறேன்.
சண்முகப்ரியா K சம்பத்குமார்

Comments
Post a Comment