கந்தர் அலங்காரம் (பாடல் 5) : குறிஞ்சிக்கிழவன்
திருந்த அம் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி
அழுங்குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே.
குருந்தை மரங்கள் நிறைந்த, அழகிய மலைகளின் தலைவனே! தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்த சிசு வீறிட்டு அழும். தன் தாயின் முலைப்பால் பருகிய பின்னரே அமைதி பெறும். அதைப்போல, பொன்னிற மேனியுடைய , ஈரேழு லோகங்களையும் ஈன்ற அம்பிகையின் திருமுலைப்பால் அருந்தி, பின் உன்னை வளர்த்த கார்த்திகைப்பெண்கள் அறுவரின் முலைப்பால் அருந்திய பின்னும் அமைதி பெறாது விம்மி விம்மி நீ அழுத நேரத்தில், நீ பிறந்த பொழுதே தங்களுக்கு முடிவு நெருங்கி விட்டதை எண்ணி அந்த சூரனும், அவனைக் காத்து நின்ற க்ரௌஞ்சமும், அவன் கோட்டையை சூழ்ந்திருந்த கடலும் கூட அழுதிருக்கும் என்று பெருமானைப் புகழ்கிறார்.
குறிஞ்சி என்பது மலைகளை குறிக்கும். கிழவன் என்றால் தலைவன் அல்லது உரியவன் என்று பொருள். அக்குறிஞ்சி நிலத்திற்கு உரிய தலைவன் ஆதலால் முருகப்பெருமானைக் குறிஞ்சிக்கிழவன் என்று இவ்வுலகம் அழைக்கும் என்று அருணகிரிநாதர் போற்றுகிறார்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
சண்முகப்ரியா K சம்பத்குமார்
For English, please visit the link given below👇
Comments
Post a Comment