கந்தர் அலங்காரம் (பாடல் 7) : உள்ளப்பிணி


சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என்றன்

உளத்தில் பிரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர் உரத்து உதிரக்

குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்

களத்தில் செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே!


பிறரை துன்புறுத்தும் கொடியவர்களான அவுணர் எனும் அசுரர் இனத்தை, உன் திருவேலினை ஏவி அழித்தாயே! உன் வெற்றிக்களத்திலே, அவர்களின் மார்பிலிருந்து இரத்தம் பெருகி வழிந்து ஓடுகிறது. இரத்தம் பருகும் பேய்கள், அந்த இரத்த வெள்ளத்தில் ஆனந்தமாய் குதித்து, அதில் முழுகி, அதைக்குடித்து ஆனந்தமாய் ஆடி கொண்டு இருக்கின்றன. 

இறைவா! என்னையும் துன்பம் என்னும் கயிறு  சுற்றிக்கொண்டு இருக்கிறது. மூடத்தனமான காரியங்களைச் செய்து மீண்டும் மீண்டும் கர்மங்களுக்குள் மாட்டிக்கொண்டு என் உள்ளம் தவிக்கிறது. என் உள்ளப்பிணிகளைத் தவிர்த்து எனை ஆட்கொள்வாய் இறைவா! 

என்று இறைவனிடம் மன்றாடுகிறார். 

உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வழிபடுதலே கிரியை ஆகும். துன்பம் களைய இறைவனை உடலாலும் உள்ளத்தாலும் வழிபட வேண்டும்.  துன்பத்திற்கு காரணம் காமம், குரோதம் (கோபம்), லோபம் (பேராசை), மோகம் (அறியாமை), மதம் (கர்வம்),  மாச்சரியம்  (பொறாமை) என்னும் ஆறு உள்ளப்பிணிகள். அப்பிணிகளை அழித்து பிறவி என்னும் பெரும் துன்பத்தை அழிக்க இறைவன் திருக்கை வேல் தான் உபாயம். நம்மை துன்பத்திலிருந்து காக்கும் காவலன் முருகப்பெருமானே என்பதை சொல்லி முடிக்கிறார். 

 அடுத்த பதிவில் சந்திப்போம்.

சண்முகப்ரியா K சம்பத்குமார் 

Comments

Popular posts from this blog

பாகீரதி - பாகம் 1 : நீர் என்னும் அமிழ்தம் (The Nectar)

மூன்றாம் பிறை (The Crescent)

கந்தர் அலங்காரம் (காப்பு) : மூத்தோன்