கந்தர் அலங்காரம் (பாடல் 8) : தனி என்னும் தத்துவம்
ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல்
அளியில் விளைந்தது ஓர் ஆநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத்
தெளிய விளம்பியவா! முகம் ஆறுடைத் தேசிகனே!
ஒளியில் உருவான ஞானம் என்னும் மலையின் உச்சியில், கருணையினால் உருவான ஒரு தனிஇன்பத்தை, தொடக்கமும் முடிவும் இல்லா பெருவெளியின் தத்துவத்தை நான் விளங்கிக்கொள்ள, எனக்கு வழிகாட்டிய ஆறுமுகமுடைய பெருமானே!
என்று இறைவனை போற்றுகிறார்.
இந்தப் பிரபஞ்சம் என்பது நம் மனித அறிவுக்கும் அதில் உதிக்கும் கற்பனைகள் அத்தனைக்கும் அப்பாற்பட்டது. இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் என்று இவைகளை பற்றிய ஒரு தெளிவின்மை என்பது எல்லோருக்கும் இருக்கின்றது என்பது உண்மை. உண்மையிலேயே இந்தப் பிரபஞ்சம் என்பது எவ்வளவு பெரியது; எதனால் ஆனது; என்னென்ன அற்புதங்கள் அதில் இருக்கின்றன; தானே உருவானதா; யாரேனும் படைத்தார்களா; படைக்கப்பட்டது என்றால் எப்படி இது படைக்கப் பட்டது; யாரால் படைக்கப்பட்டது; எதற்காக இவை படைக்கப்பட்டன; ஒரு பிரபஞ்சமா; பல பிரபஞ்சங்கள் உள்ளனவா; அவை அனைத்தையும் தாண்டி சென்றால் என்ன இருக்கும்; பெருவெளியாக இருக்குமா; நாம் எதற்காக இவ்வுலகில் பிறந்துகொண்டு இருக்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரு உயிர் பிறந்துகொண்டே இருக்குமா; அதன் சுழற்சி முடிந்துவிட்டால் எங்கே செல்லும்; இந்த உலக வாழ்க்கை தான் உண்மையா; இதை தாண்டி வேறு வாழ்க்கை உள்ளதா; இந்த உயிர் இப்படி பிறப்பதற்கும் திரும்ப சென்று ஓரிடத்தை அடைவதற்கும் என்ன காரணம்; படைத்தவன் என்று ஒருவன் இருக்கின்றானா; படைத்தவன் என்று ஒருவன் உண்டானால் இந்த உயிர் இறுதியில் அவனை காண இயலுமா; அவன் யார், எப்படி இருப்பான், ஒருவனா; பலபேரா; உருவமுடையவனா; உருவமில்லாத ஒளியா, ஒலியா என்று இன்னும் எத்தனையோ கேள்விகள் நம் மனதில் எழுவதுண்டு. என்னைப் பொறுத்தவரை இந்தப் பிறப்பு என்பது ஒரு கூண்டு. இதில் பிறந்து கொண்டிருக்கும் ஆத்மா, அந்தக் கூண்டுக்குள் சிக்கிக் கொண்டு, தான் கூண்டுக்குள் சிக்கியிருக்கிறோம் என்று கூட அறிந்து கொள்ள முடியாத சிறு குழந்தை. நாம் பார்க்கும், பார்க்க முடியாத அனைத்தும், ஒரு காலத்திலே ஒரு பெருவெளியில் தோன்றியிருக்க கூடும். அது தொடக்கமும் முடிவும் இதுதான் என்று நம்மால் கூறிவிட இயலாத பெருவெளி. அதுவே ஒளி.
இந்த உலகத்தில் நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கும் இந்த வாழ்க்கையையும் தாண்டி, அதன் பின் அதன் பின் அதன் பின் என்று தேடிச்செல்கிறவர்கள், இருக்கின்ற எல்லாவற்றையும் கடந்து எதுவுல்லாத ஒன்றை அடைகிறார்கள். அதாவது, தான், தன் உறவுகள், அவர்களின் நலம், அவர்களின் எதிர்காலம், வீடு, வாசல், பேர், புகழ் என்று இந்த உலகவாழ்க்கையில் என்னென்ன வேண்டுமோ அவை எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டு, அதை அடைவதற்கு என்றே வாழ்ந்து, அதை அடைந்த பின்னோ, அதை அடைய முடியாத பின்னோ, பல புண்ணியங்களையும், பல பாவங்களையும் செய்து அதன் பலன்களையும் அனுபவித்து, எல்லாம் சலிப்படைந்து, இனி எதுவும் அடைய தோன்றாத, எதன் மூலமும் இன்பமோ துன்பமோ தோன்றாத, எதையும் வேண்டாத ஒரு சலனமற்ற தெளிவான மனநிலை. அதுவே பாழ்.
அந்த நிலை என்று நம் மனதில் உதிக்கிறதோ, அன்று இறைவனின் கருணை நம் மனதை ஆட்கொள்கிறது. இறைவனின் கருணை ஆட்கொண்டுவிட்டால், நாம் யார் என்பதையும், நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்பதையும், இனி நாம் செல்லவேண்டிய பாதை எது என்பதையும் அறிந்து கொள்ளலாம். மிகச்சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தன்னையே அறிதல் என்னும் ஞானத்தைப் பெறலாம். அந்த ஞானத்தை நாம் அடையப்பெற்றுவிட்டால், நம் மனதில் தோன்றும் அத்தனை கேள்விகளுக்குமான பதில் கிடைத்துவிடும். அந்தப் பதிலே நம் ஆத்மா அடையப்பெறும் உண்மையான ஆனந்தம். அதுவே உண்மைப்பொருள். தனிப்பொருள்.
அருணகிரியாருக்கு நேர்ந்ததும் இதுவே. உலக இன்பங்களில் ஆட்பட்டு, பின் அதன் மீது வெறுப்புற்று, இறைவன் அருளால் அந்த இன்பங்களைத்தாண்டிய ஒரு சலனமற்ற தனிமைக்கு சென்று, அதன் விளைவாக ஞானம் பெற்று, உண்மைப்பொருள் என்ன என்பதை உணர்ந்து கொண்டவர் அருணகிரிநாதர். இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்ள அவருக்கு வழிகாட்டியவர் தான், தன் தந்தைக்கே உபதேசம் செய்த ஆசானாகிய, சுவாமிக்கு நாதனாகிய, ஆறுமுகப்பெருமான்.
அருணகிரியாருக்கு காண்பித்ததை போலவே நமக்கும் நல்வழிகாட்டி, அவர் அனுபவித்த ஆனந்தத்தை நாமும் அனுபவிக்க, இறைவனின் கருணை நம்மை ஆட்கொள்ளவேண்டும் என்று வேண்டி இந்தப்பதிவை நிறைவு செய்கிறேன்.
சண்முகப்ரியா K சம்பத்குமார்
For english, please visit the link given below👇

Comments
Post a Comment