கந்தர் அலங்காரம் (பாடல் 9) : எதுவுமில்லா ஒன்று
தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ
வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீர் அன்று, மண்ணும் அன்று,
தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே.
"தேனும், இனிப்பான பாகும் கூட உவமை குன்றலாக தோன்றும்படி, இனிமையான மொழியை பேசும், தெய்வீக மனமுடைய வள்ளியம்மையின் கணவனாகிய முருகப்பெருமான், எனக்கு உபதேசித்தது ஒன்றே ஒன்று. அதைக் கூறுகிறேன் கேளுங்கள். அது வான் அன்று; காற்றன்று; நெருப்பன்று; நீரன்று; நிலமன்று; தான் அன்று; நானும் அன்று; சரீரம் உடையதும் அன்று; சரீரம் அற்றதும் அன்று" என்று ஆர்வத்தோடு நமக்குக் கூற விழைகிறார்.
இங்கு இறைவனையே இனிமையானவன் என்று கூறுவதை விடுத்து, இனியவளான வள்ளியம்மையின் கணவன் என்று ஏன் கூறவேண்டும்? வள்ளி கணவன் என்று இறைவனை பல இடங்களில் பாட என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தபோது தான், அதன் உண்மை தத்துவம் புரிந்தது. இங்கு வள்ளி என்பவள் நம் ஜீவாத்மா. அவள் பாகையும் தேனையும் விட இனிய மொழியுடையவள். அப்படியென்றால் கடும் சொல் ஒன்றுகூட சொல்லாத, சொல்குற்றம் இல்லாத அன்பான வார்த்தைகளைப் பேசக்கூடியவள். அவள் தெய்வ வள்ளி. அனைவரிடமும் உள்ளன்போடு, கருணையோடு இனிமையாக பழகும் மனிதர்களின் இதயம் தெய்வீகமானது. அதாவது அன்பு நிறைந்தவர்கள் இதயம், தெய்வம் இருக்கும் இருப்பிடமாகிறது. அந்த தெய்வ வள்ளியின் கோன் என்று இறைவனை அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். அன்பு நிறைந்தவர்கள் உள்ளத்தை, இறைவனே ஆளுகின்றார். இறைவன் உள்ளத்தை ஆளும்போது, இந்த புறப்பொருட்கள் அனைத்தையும் கடந்த அகப்பொருளை நம்மால் உணர்ந்து கொள்ள இயலும்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
சண்முகப்ரியா K சம்பத்குமார்
For English, please visit the link given below👇

Comments
Post a Comment