ஞானப்பழம்
அனைவருக்கும் வணக்கம்.
நம்மில் அநேகமானோர் திருவிளையாடல் படத்தைப் பார்த்திருப்போம். அதில் திரு.கண்ணதாசன் அவர்கள் இயற்றிய 'ஞானப்பழத்தைப் பிழிந்து' என்கிற பாடல் வரும்பொழுது, வரிகளின் அர்த்தம் தெரியாமல், உளறிய படியே பாடிக்கொண்டு இருப்பது தான் எப்பொழுதும் வழக்கம். அப்பாடலில் பல வரிகள் தெளிவாகப் புரிந்தாலும் முதலில் வரும் சில வரிகள் எனக்கு புரிந்ததே இல்லை. ஞானப்பழத்தைத் தனக்குத் தரவில்லை என்று கோபித்துக்கொண்டு, தன் தாய்தந்தையை நீங்கிச் செல்லும், அழகிய கோபப் பழமான முருகப்பெருமானை, அவ்வை சமாதானப்படுத்த முயலும்படி அமைந்த பாடல் தான் அது. இன்று அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று மனம் ஆசைகொண்டது. அவ்வரிகளை தேடிப் படித்தபொழுது மனம் இன்னும் குதூகலித்தது. இறைவனை இதைவிட அழகாக புகழ்ந்து விட முடியுமா என்று ஆச்சர்யமும், ஆனந்தமும் ஏற்பட்டது. உங்களுக்கும் அந்த இன்ப உணர்வு நிச்சயம் துளிர்க்கும். அந்த வரிகள் இதோ.,
முருகா! நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ! உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்,அப்பனித் தலையர் தரவில்லை...! அப்பனித் தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..!
இதன் விளக்கத்தைப் படிப்பதற்கு முன்பு, பெருமானின் முன்கதையையும் ஒருமுறை படித்துவிட்டு வரலாம்.
ஈசனின் நெற்றிக் கனலில் விளைந்த ஆறு நெருப்புப் பொறிகளை அக்னி தேவர் ஏந்திச் சென்று, நாணல் புற்கள் நிறைந்ததான அழகிய பொய்கையில், ஆறு கமலங்களில் சேர்க்கிறார். ஆறு நெருப்புப்பொறிகளும், ஆறு குழந்தைகளாயின. ஆறு குழந்தைகளையும், கார்த்திகை பெண்கள் என்னும் ஆறு தேவப் பெண்கள் வளர்கிறார்கள். பின்பு, அம்பிகையால் ஆறு குழந்தைகளும், ஆறு திருமுகங்களும் பன்னிருகரங்களும் கொண்டு ஒரே குழந்தையாக வடிவெடுக்கிறார்கள்.
பிரம்மதேவரை குருவாகக் கொண்டு அனைத்து உபதேசங்களையும் பெறுகிறார் ஆறுமுகப்பெருமான். அனைத்தையும் கற்ற பின்பும் பிரணவத்தை அறிய வேட்கை கொண்டு, பிரணவத்தை அறிந்து கொள்ள அவரின் வேட்கை தூண்டுகிறது. தன் பிரம்மஞானத்தின் சக்தி கொண்டு ப்ரணவத்தையும், தாமே பிரணவ ப்ரம்மஸ்வரூபம் என்றும் அறிகிறார். அதைத் தன் தந்தையான ஈசனுக்கும் உபேதசிக்கிறார்.
"அர்ஜுனா! நானே பரப்பிரம்மம்" என்றும், "சேனாதிபதிகளில் ஸ்கந்தன் நானே!" என்றும், "ஒலிகளில் நான் ஓம்" என்றும் கிருஷ்ணர் கீதையில் கூறுகின்றார். பரப்ரம்மமும் ப்ரணவமும் முருகப்பெருமானும் ஒன்றே அன்றி வேறல்ல என்பது இதிலிருந்து தெளிவாக ஊர்ஜிதமாகிறது.
(நாம் பலமுறை கேட்ட கதை தான். முருகப்பெருமான் பிரம்மனின் தலையை குட்டி சிறைப்படுத்திய கதை. ஆனால் அதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. "சேனாதிபதிகளில், நான் ஸ்கந்தனாக இருக்கிறேன்" என்று கிருஷ்ணபரமாத்மா கீதையில் கூறப்பட்டவரும் , எல்லாம் அறிந்தவரும், பரம்பொருளின் அம்சமுமான இறைவன், தன்னை விட மூத்தவரும், படைப்பின் தேவனுமான ப்ரம்மதேவரை அவமதிப்பது போன்ற செயலை செய்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்பது என்னுடைய ஆழமான உள்ளுணர்வு. என்னுடைய தாழ்மையான கருத்தும் கூட.)
'ஸ்வம்' என்றால் ஆன்மா அல்லது சொத்து என்று பொருள். எல்லா ஆன்மாக்களையும் தன் சொத்தாக உடைய முழுமுதற்பொருளையே சுவாமி என்று அழைக்கிறோம். அனைத்துக்கும் உடையோன் ஆகிய சிவபெருமானே சுவாமி. நாதன் என்றால் தலைவன் அல்லது ஆசிரியர். சுவாமியாகிய ஈசனுக்கே உபதேசம் செய்தலாதலால், சுவாமிக்கே தலைவன் ஆன சுவாமிநாதன், எம்பெருமான் கந்தசுவாமி.
"பிரணவம் என்னும் ஞானப்பழத்தின் சாற்றை, உன் தந்தையாகிய இறைவனுக்கே பெரும்கருணையோடு அருளிய தலைவன் நீ! அப்படிப்பட்ட பெருமைக்குரிவருக்கு, தான் போய் எப்படி இப்பழத்தை ஈவது என்று நாணமுற்றத்தினால் தான், குளிர்ந்த கங்கையை தலையில் சூட்டியுள்ள பெருமானாகிய உன் தந்தை (பனித்தலையர்), உனக்கு அப்பழத்தை தரவில்லை. ப்ரணவஸ்வரூபமானவனும் , எல்லாம் தன்னகத்தே கொண்டு, அனைத்தையும் கடந்து நிற்போனாகியவன் உனக்கு அதனால் எவ்வித குறையும் இல்லை பெருமானே!"
என்று குழந்தைக்கு சமாதானம் கூறுகின்றார் அவ்வை.
இவ்வரிகளின் அர்த்தத்தை தெரிந்துகொண்ட போது, இறைவனின் கீர்த்தியினை எண்ணி, உள்ளம், கர்வமும் பூரிப்பும் கொண்டது. கண்கள் ஆனந்த நீரை சுரந்தன. மறுநொடி மனம் இறைவனின் பதம் வீழ்ந்தது. இதைப் படித்த தங்களுக்கும், இன்ப ஊற்று, உள்ளத்தில் நிச்சயம் தோன்றியிருக்கும்.
இன்று முருகப்பெருமான் அவதரித்த, வைகாசி விசாக திருநட்சத்திர நன்னாள். முருகப்பெருமான் தமிழ்க்கடவுள். வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மட்டுமல்லாது தமிழ் மொழியில் ஒப்பற்ற பல நூல்கள் முருகனைக் கொண்டாடுகின்றன. அதில் சங்க இலக்கிய நூலும், எட்டுத்தொகை நூல்களில் ஒன்றுமான பரிபாடல், முருகப்பெருமானைப் போற்றிப்பாடுகிறது. இது ஒரு பண்ணிசை இலக்கியம். இசையோடு பாடப்பட்ட முதல் தமிழ் இலக்கியம் இது. மேலும் பிற்கால பக்தி இலக்கியங்களுக்கு (தேவார, திவ்ய பிரபந்தம்) இதுவே முன்னோடி. முதன்முதலில் கடவுளை முழுமையாகத் துதிக்கும் பக்திப் பாடல்களுக்கு, இந்நூலே வழிகாட்டியாய் அமைந்தது. அதில் செவ்வேளை வாழ்த்தி வணங்கும்படி உள்ள இரு பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்னோர் அல்லது இன்னோர் சேர்வார் ஆதலின்,
யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல;
நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் -
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக!
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!
நறுமணமிக்க கடம்பமலர் மாலையினை விரும்பி சூடும் எம்பெருமானே! நீயே எங்களுக்கு அன்னை. உன்னிடம் நாங்கள் வேண்டுவது பொன்னோ, பொருளோ, போகமோ அல்ல. மாறாக, உன்னை நாங்கள் வந்தடையத் தேவையான அறச்சிந்தனையையும், உன்மீது மாறாத அன்பினையும், அதன்பொருட்டு எங்கள் மீது உன்னுடைய கருணைகொண்ட அருளினையும் வேண்டுகிறோம். உன்னை நாங்கள் மீண்டும் மீண்டும் அன்பு பூண்டு வழிபட்டு கொண்டே இருக்க வேண்டும். அவ்வழிபாடானது, பழம்பெறும் தொன்மை நிறைந்த மரபாக ஆகிட வேண்டும். அம்மரபு காலம்காலமாகத் தொடர வேண்டும். உன்புகழ் எல்லாக்காலங்களிலும் நீடூடி வாழ்ந்திட வேண்டும்!
என்று முருகப்பெருமானிடம் மனத்தூய்மையையும், அவர் புகழ் நீடூடி வாழ்ந்திட வேண்டும் என்றும் வாழ்த்தி வணங்குகின்றனர். அவர்கள் வேண்டியதைப்போலவே, அன்றும் இன்றும் இனி என்றும் பெருமானின் புகழ் நீடூடி வாழும்.
நாமும் அவ்வண்ணலை வாழ்த்தி, அவரது அருள் பெறுவோம் என்று கூறி, இப்பதிவினை மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன். மீண்டும் சந்திப்போம்.
நன்றி!
சண்முகப்ரியா K சம்பத்குமார்

.png)
Comments
Post a Comment